நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவிலிருந்து விலகி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாட்டை வங்குரோத்தடையச் செய்து, தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கான காரணிகளை ஆராய தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா பாராளுமன்றத்தில் முதலில் முன்மொழிந்தார்.
பல மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த மக்கள் சார்பு பிரேரணைக்கு நேர்மறையான அல்லது சாதகமான பதிலை வழங்காத அரசாங்கம் வழமை போன்று நிழல் பெரும்பான்மையுடன் தெரிவுக்குழுவொன்றை விருப்பத்துக்கு ஏற்றவாறு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த 21ஆம் அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டன. அதனைப் போன்றே இந்த யோசனையையும் அரசாங்கம் அதன் குறுகிய அரசியல் நிகழச்சி நிரலுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்களிடமே அது தொடர்பில் விசாரிப்பதற்கான பொறுப்பும் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தெரிவுக்குழுவில் பணிபுரிவது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். அத்தோடு அது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இழைக்கப்படும் தவறாகும். எனவே இந்த தெரிவுக்குழுவிலிருந்து விலக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எனவே பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி சார்பு கூட்டணியின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஊடாக வெளிப்படை தன்மை, பொறுப்பு கூறல் மற்றும் பொறுப்புணர்வோடு நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை இனங்கண்டு அவர்கள் செய்த மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்டவை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து பொறுப்பு கூற வேண்டிய அனைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இக்குழு பரிந்துரைக்கும்.