சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை நீக்கி கொள்ளாமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்
சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றபோது அவற்றுக்கான அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, சுகாதார அமைச்சின் செயலாளர் தொழிற்சங்கங்களை நசுக்கி, உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியாமல் செய்வதற்கான முயற்சிகளை செய்து வருவதாக ரவி குமுதேஷ் சுகாதார அமைச்சின் செயலாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்வதற்காகவே, இவ்வாறான கடுமையான நடவடிக்கைகளை எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை சந்தித்து சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இக்கோரிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் உரிய பதில் அளிக்காததால், பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் கடந்த ஞாயிறன்று (30) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பை அடுத்தே ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி,எதிர்வரும் 3 ஆம் திகதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்களும் இணங்கியிருந்தன.
இந்த ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அமைச்சு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்தார்.