இரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழு திறைசேரியின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
அரசாங்க நிதி தொடர்பான குழு கடந்த 15 ஆம் திகதி கூடியது.
பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறவுள்ள 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதிக் (கட்டளைச்) சட்டத்தின் கீழ் 2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2336-45ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்நாட்டில் கோதுமைமா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றின் இருப்புக்களை அதிகம் பேணி அதன் ஊடாக பெருந்தொகை இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் இந்நாட்டில் கோதுமை மாவுக்கான சந்தையில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தைக் கொண்டுள்ள இரண்டு நிறுவனங்கள் கோதுமையைத் தானியமாக இறக்குமதி செய்ய வாய்ப்புக் கிடைத்திருப்பதால் அதிக இலாபம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா ? என்பது அறியப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
இதற்கமைய 2023.06.14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் எந்தளவு தூரத்துக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு தற்பொழுது காணப்படும் கோதுமை மா இருப்புக்கள் குறித்து சரியான தரவுகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கமைய இதில் ஏதாவது மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
1979 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2336-71ஆம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சீமெந்துக்கான மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் செஸ் வரியை அதிகரிப்பதன் ஊடாக கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்து விலைக்கும் விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையிலான விலை வரி கழிக்கப்பட்ட பின்னர் சுமார் 700 ரூபா இலாபமாக ஈட்டப்படுவதாக குழு குறிப்பிட்டது.
சீமெந்து மற்றும் இரும்புக் கம்பி இறக்குமதி செய்யப்படும் விலை மற்றும் சகல வரிகளும் கழிக்கப்பட்ட பின்னரான விற்பனை விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசத்தைப் பேணுவதால் அதிகமான இலாபம் ஈட்டப்படுவதாகவும்இ இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் நிதி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் கட்டுமானத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடுகள் நடுத்தர வருமானம் பெறுவோக்கான வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வீடுகளை அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதாகவும், இது தொடர்பிலும், கட்டுமானத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்தும்அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு வலியுறுத்தியது.
இதற்கு முன்னர் 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வீட்டை தற்பொழுது நிர்மானிப்பதற்கு ஆகக் குறைந்தது 24 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நிதி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வரி அதிகரிப்புக்களின் போது ஏற்படுகின்ற சமூக ரீதியான பாதிப்புக்கள் குறித்து உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாமை பாரிய பிரச்சினை என்றும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் சீமெந்து விலையைக் கண்காணிப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறையில் தலையிட வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான 2343-60 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2008ஆம் ஆண்டு 14ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான 2339ஃ08 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை என்பனை இங்கு ஆராயப்பட்டன.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான சலுகை நடவடிக்கைகள் பின்பற்றப்படாமை உள்ளிட்ட விடயங்களை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் முதலீட்டு சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.