கடன் தொல்லை, பிரிந்த கணவரது துன்புறுத்தலால் இளம் தாய் தற்கொலை

கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவரால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மன்னார், வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாயானவரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது:

இச்சம்பவத்தில் றெஜினோல்ட் வாசுகி (22) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இந்த பெண், இரண்டு வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இப்பெண் மன்னாரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்துவந்தார்.

இவருக்கு கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவரின் துன்புறுத்தல்கள் தொடர்ந்து வந்ததால், மன விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளார்.

நேற்று இந்த பெண் தனது பணியிடத்திலிருந்து அரை நேரத்துடன் வீடு திரும்பியதன் பின்னர்,  இரவு 8 மணி வரை இவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் வீட்டுக்குள் தனது  அறையை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு தூக்கில் தொங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படியும், அதன் பின்னர் அதனை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் மன்னார் மரண விசாரனை அதிகாரி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.