கணவன், குழந்தையை கைவிட்ட இளம் தாய்க்கு விளக்கமறியல்

கணவனையும் மூன்று வயதான குழந்தையையும் கைவிட்டுவிட்டு, மற்றுமொரு இளைஞனுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

22 வயதான இளைஞனுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்த பெண்ணே, எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.

குறித்த பெண் சிறுவயதாக இருக்கும் போதே,  இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் முடித்து இருவரும் கணவன் மனைவியாக  வாழ்ந்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் கணவருக்கு தொழில் வாய்ப்பு இல்லாததை அடுத்து அவர் வேலைவாய்ப்பு பெற்று மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றுள்ளார்.

அண்மையில் அவர் நாடு திரும்பினார். எனினும், அந்தப் பெண் அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த இளைஞனுடன் தொடர்பு வேண்டாம் என கணவன் அறிவுறுத்தி வந்த போதிலும், கணவனையும் குழந்தையையும் விட்டுவிட்டு இரு தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு குறித்த இளைஞனுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு எதிராக பொலிஸ் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அப்பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

விசாரணைக்கு வந்த பெண், 22 வயதான  இளைஞருடன் செல்ல போவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கடமையை செய்யவிடாது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களை தாக்கவும் முயன்றார். அத்துடன், பொலிஸ் நிலைய கட்டட, யன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளார். இதனையடுது்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.

அவரது 3 வயது சிறுகுழந்தையை விட்டு சென்றமை மற்றும்  கடமையை செய்யவிடாது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை  போன்ற பல குற்றச் சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அப்பெண்ணை,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.