கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவரின் மரணத்துக்கு தடுப்பூசியே காரணமாம்!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரின் மரணத்துக்கு ஒவ்வாமையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி குறித்த நோயாளி செஃப்டாசிடைம் என்ற தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளியான அவருக்கு வயது 67.

ஒரு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அன்றைய தினம் முதல் 11ஆம் திகதி வரை பத்து தடவைகள் உரிய தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

11ஆவது முறையாக தடுப்பூசி போடப்பட்டபோது, இந்த ஊசி போட்டப்பட்டு  ஐந்து நிமிடங்களில் நோயாளி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதையடுத்து, இந்த மருந்தை பாவனையிலிருந்து நிறுத்திவைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னரும் மருந்து ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், இது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.