காணிச் சட்டங்களை பின்பற்றினால் காணி பிணக்குகளை தவிர்க்கலாம்

அரச காணியை பெறுவோர் நடைமுறையில் உள்ள அரச காணிச் சட்டங்களை பின்பற்றுவதன் மூலமும் அதற்குரிய அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதன் மூலமும் காணிப்பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளலாம் என ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கணேசலிங்கம் ரவிராஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச காணிகளை பெறுகின்ற பயனாளிகள் அரச நடைமுறைகளை பின்பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அரச ஆவணங்களை பெற்றுக் கொள்ளாததன் காரணமாகவே அதிகமான காணிப் பிணக்குகள் உருவாகின்றன.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறான பிணக்கு ஒன்று உருவாகாமல் இருக்க அரச காணிச் சட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் உள்ளன. எனவே அவற்றை அனைவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

இலங்கையில் அரச காணி, தனியார் காணி என இருவகையான காணிகள் உள்ளன. இதில் 80 தொடக்கம் 82 வீதமான காணிகள் அரச காணிகளாகவும் 18 தொடக்கம் 20 வீதமான காணிகள் தனியார் காணிகளாகவும் இருக்கின்றன.

1948ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானிய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் தனியார் காணிகள் எனவும் ஏனைய காணிகள் அரச காணிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வித காணிகளும் இல்லாத வறிய மக்களுக்கு இலவசமாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு குத்தகை அடிப்படையிலும் அரச காணிகள் வழங்கப்படுகின்றன. காணி இல்லாதவர்கள் குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரை அணுகி தங்களுக்கான காணியை பெற்றுக் கொள்ள முடியும். இதன்போது முதலில் “அனுமதிப்பத்திரம் (Permit)” பிரதேச செயலாளரினால் வழங்கப்படும்.

குறித்த காணி குறித்த நபர்களினால் பிரதேச செயலாளர் திருப்திப்படும் பட்சத்தில் பராமரிக்கப்படுமானால் அக்காணிக்கான “அளிப்புப் பத்திரம் (Grant)” வழங்கப்படும். இதுவே காணி உரிமையாளரின் உரிமத்துக்கான ஆவணமாகும். இது கௌரவ ஜனாதிபதியினுடைய கையொப்பத்துடன் வழங்கப்படும்.

“அளிப்புப் பத்திரானது (Grant)” ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தினால் சுவர்ணபூமி, ஜெயபூமி, இசுறுபூமி, ரண்பூமி போன்ற வெவ்வேறு பெயர்களினாலும், வெவ்வேறு நிறங்களினாலும் (கோப்பு) வழங்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரேமாதிரியான இயல்பையும், அதிகாரங்களையும் கொண்டிருக்கும் என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமதிப்பத்திர உரிமையாளர் அல்லது அளிப்பு உரிமையாளர் உயிரோடு வாழும் காலத்திலேயே தனக்கு பின்னதாக இந்த காணி யாரை சென்றடைய வேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. அதற்கு பெயர் பின்னுரிமை நியமனம் செய்தல் (L.C – 155) காணி உரிமையாளர் உயிருடன் இருக்கும்போதே பிரதேச செயலாளரை அணுகி தனது கண்ணுக்குப் பின்னர் இந்தக் காணி யார் யாருக்கு செல்ல வேண்டும் என பதிவு செய்து கொள்வாராயின் காணிப் பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

அத்துடன் பின்னுரித்து குறிப்பிடப்படாதவிடத்து அக்காணியின் உரிமம் தொடர்பாக 2022/4 இலக்க காணி ஆணையாளர் நாயகத்தின் சுற்றறிக்கையின் மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பால்நிலை சமத்துவம் பேணப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைக்கு என்றவாறாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச காணிக்கான அனுமதிப்பத்திரம், அளிப்புப்பத்திரம் ஆகியவற்றைத் தவிர ஏனைய கடிதங்கள், ஒப்பங்கள், துண்டுகள் போன்ற எவையும் வலுவற்ற ஆவணங்களாகும் அதேபோன்று வருடார்ந்த அனுமதிப்பத்திரமும் (Annual Permit) தற்போது வலுவற்ற ஆவணமாகும்.