காணியை சுவீகரிப்பு முயற்சி: மூன்றாவது நாளாக தடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக, புதன்கிழமை (26)   தடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு –  உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையே  முன்னெடுக்கப்படவிருந்தது.

குறித்த பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில்  15 பேர்ச் அளவில்  கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிக்காக அரச நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்தனர்.

காணி உரிமையாளர்,  மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து எதிர்ப்பினை வௌிப்படுத்தியதையடுத்து, காணி அளவீட்டினை அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, பிரதேச மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.