கால்நடை வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக நான்கு கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

குறித்த பண்ணையாளர் ஒருவரது பசுமாடு நோய்வாய்ப்பட்ட நிலையில் பூனகரி கால்நடை வைத்தியரை குறித்த பண்ணையாளர் தொடர்பு  கொண்டபோதும் வைத்தியர் குறித்த பகுதிக்கு செல்லாத நிலையில் குறித்த பசுமாடு உயிரிழந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் அவரது மற்றைய பசுமாடும் அவ்வாறு நோய்வாய்ப்பட்ட நிலையில் பண்ணையாளர்களால் அவதானிக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பில் பூநகரி பிரதேச கால்நடை வைத்தியருக்கு அறிவித்திருந்த போதும் மூன்று நாட்களாகியும் அதற்கான உரிய சிகிச்சைகளை வழங்கப்படவில்லை தொடர்ந்தும் நான்காவது நாள் அந்தப் பசுமாடும்  உயிரிழந்துள்ளது.

இதனைவிட அப்பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருபண்ணையார்களின் பசுமாடுகளும் இவ்வாறு நோய்வாய்ப்பட்ட நிலையில் பூனகரி கால் நடை வைத்தியருக்கு அறிவித்தும் எதுவித சிகிச்சைகளும் வழங்கப்படாத நிலையில் அந்த கால் நடைகளும் உயிரிழந்துள்ளன.

ஆனாலும் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்தமைக்கான மருத்துவ ரீதியான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக பூனகரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையினை  தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அலுவலகத்திலிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.குறித்த அலுவலகத்தில் பணியாற்றும்  குறித்த பகுதிக்கு பொறுப்பாக இருக்கின்ற அதிகாரியொருவர் தான் கட்டநாயக்கா விமான நிலையத்தில் இருப்பதாகவும்,மற்றுமொரு பெண்  வைத்திய அதிகாரி குறித்த பண்ணையாளர்கள் தன்னை நேரடியாக தெடர்பு கொண்டால் மாத்திரமே சிகிச்சை வழங்க முடியும் என்றும், கால்நடைகள் இறந்தமை தொடர்பில் எந்த களப்பரிசோதனைகளையோ அல்லது மருத்துவ  பரிசோதனைகளையோ மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

களிநொச்சி பூநகரி பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக சின்னம்மை நோய் காரணமாகவும் அதிகளவான கால்நடைகள் இறந்த போதும் அது தொடர்பாக கால்நடை வைத்திய  அதிகாரிகள் குறித்த பகுதிகளுக்கு வருவதில்லை என்பதையும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.