கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையின் பிரசவ அறைக்கான குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனால் மகப்பேற்றுக்காக சென்று பிரசவத்திற்காக தங்கியிருங்கும் தாய்மார் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
முல்லைத்தீவு மல்லாவி மாங்குளம் நட்டாங்கண்டல் ஆகிய வைத்தியசாலைகளிலிருந்தும் விசுவமடு உடையார்கட்டு தருமபுரம் ஆகிய பகுதிகளிலும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கே வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அதிகளவான பிறப்பு வீதத்தை கொண்ட வைத்தியசாலைகளில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையும் ஒன்றாக காணப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று அறையின் குளிரூட்டி வசதி முற்றாக செயலிழந்த நிலையில் பிரசவத்துக்காக காத்திருக்கின்ற தாய்மார்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக அடிக்கடி குறித்த அறைக்கான குளிரூட்டி வசதிகள் பழுதடைந்து வருவதனால் பழுதடைந்து வருகின்ற நிலையிலும், அதனை சீர் செய்கின்ற போதும் மீளவும் அவை பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
எனவே, குறித்த வைத்தியசாலையினுடைய மகப்பேற்று அறையின் குளிரூட்டி வசதிகளையும் ஏனைய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு மருத்துவத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.