குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில்  குத்தகைக்கு வழங்க  அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் தற்போது லைக்கா குழுமத்திற்கு குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் சனல் ஐ யிற்கு அரசால் நிதி வழங்க முடியாததால் பணிப்பாளர்கள் குழுவின் முடிவின் படி ஐ சனல் குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சர் பந்துல இதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த போது, நாட்டின் திறைசேரிக்கு சுமையாக இல்லாமல் சனல் ஐ யினை இயங்க வைக்கும் இச்செயற்பாட்டிற்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லையென அமைச்சர்கள், அவருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக சனல் ஐயின் ஒளிபரப்பு நேரம் ரூ.25 மில்லியனுக்கு லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதுடன், ஒரு மாத முன்னறிவிப்புடன் ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிதி நெருக்கடி மற்றும் குறிப்பாக மின்சார செலவுகளின் பொருட்டு சனல் ஐயின் தினசரி ஒளிபரப்பு நேரம் 4 தொடக்கம் 5 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. அதனால் அலைவரிசையை குத்தகைக்கு விடுவதே ஒரே வழியாக இருந்ததுடன் குறுகிய காலத்திற்கு அலைவரிசையை இயக்க லைக்கா நிறுவனம் மட்டுமே முன்வந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சனல் ஐயை நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த நிர்வாகக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும், குறைந்தபட்ச குத்தகைத் தொகை மாதம் ரூ.25 மில்லியன் என்றும் குணவர்தன குறிப்பிட்டார்.