கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு முன்னால் நேற்று(23) மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
காவல் துறை கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
கனத்தை மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு காவல் துறை வாகனங்களை காணமுடிந்தது.
வீதியின் இருமருங்கிலும் காவல் துறையினரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கமுயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- காவல் துறையினரும் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.
ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர் இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் காவல் துறையினர் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.
இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து காவல் துறையினர் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர் .
எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை காவல் துறையினர் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.
காவல் துறையின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.