சர்வகட்சி மாநாடு காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம்

அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு தீர்வை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட நேர்மையானதொரு முயற்சி அல்ல என்றும், மாறாக அது அடுத்த ஜனாதிபதித்தேர்தல் வரை இவ்விவகாரத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சி மாத்திரமே என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (26) நடைபெற்ற சர்வகட்சிக்கூட்டத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட போதிலும், அதுகுறித்த இறுதித்தீர்மானம் எதுவும் எட்டப்படாமலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.

குறிப்பாக 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கும் அதேவேளை, மாகாணசபைத்தேர்தல்களையும் உடனடியாக நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதை அடுத்து, அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சந்திப்பு குறித்துக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், ‘இந்த சர்வகட்சி மாநாடு தீர்வை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட நேர்மையானதொரு முயற்சியல்ல. மாறாக இது வெறும் காலத்தைக் கடத்தும் நோக்கிலான நடவடிக்கை மாத்திரமேயாகும்’ என்று தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தம் குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கும், அதுபற்றி ஆராய்வதற்கும் பிரத்யேக குழுக்கள் எவையும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் தற்போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சரவைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதானது அடுத்த ஜனாதிபதித்தேர்தல் வரை இவ்விவகாரம் இழுத்தடிக்கப்படும் என்பதையே புலப்படுத்துகின்றது என விசனம் வெளியிட்டார்.