சிறிலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை

மலையகத் தமிழ் மக்களுக்கே  உரித்தான பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதிக்கும், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு எமக்கு எந்தவித உத்தியோகபூர்வமான அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தான் நாம் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்  ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு தற்போது உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  அதற்கமைவாக அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் தனியான சந்திப்பில் கலந்து கொள்ள போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடான ஜனாதிபதி சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம் ஏன் கலந்து கொள்ளவில்லை? என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு எமக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே தோட்டத் தொழிலாளர் சங்கம் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. எமக்கு எமது மரியாதை முக்கியம். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாமல் மலையகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் மலையகத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

இதற்கான தனியான மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும். மலையக மக்கள் சார்பாக எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய விடயங்களை கலந்துரையாட வேண்டும். இதற்கான முழுமையான பங்களிப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஜனாதிபதி 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக ஜனாதிபதிக்கு எமது முழுமையான ஆதரவை பாராளுமன்றத்தில் வழங்குவோம். மலையக மக்களுக்கு என்று ஒரு தனியான அழகு வேண்டும். முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். எமக்கும் அனைத்து உரிமைகளும் வேண்டும்.

மேலும் ஜனாதிபதியிடமிருந்து எமக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்க பெற்றிருக்கிறது. அவர் எம்முடன் தனியானதொரு சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், காணிகளுக்குரிய உரித்து வழங்கும் திட்டம் மற்றும் கடந்த 200 வருடங்களாக எமது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பன தொடர்பில் தீர்க்கமான முடிவை மேற்கொள்வதற்கு இந்த சந்திப்பு அர்தமுள்ளதாக அமையும் என நினைக்கிறோம். அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும்  என்றார்.