பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது, அச்சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில் பறவைகளை துரத்திச் சென்ற 11 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் அம்பாறை 24வது காலாட்படை தலைமையகத்தில் கடமைகளில் ஈடுபட்டு வரும் 38 வயதுடைய இராணுவ கோப்ரல் ஒருவரே என தெரிவிக்கப்படுகிறது. இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமி, வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மாலையில் பறவைகளை துரத்திக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது மூத்த சகோதரியை யாரோ இழுத்துச் செல்வதைக் கண்ட இளைய சகோதரர் தனது தாயிடம் சத்தமிட்டு கூறியுள்ளார். சிறுமிக்காக தாய், அலறி அழத் தொடங்கியதை அடுத்து, சந்தேகமடைந்த இராணுவக் கோப்ரல் சிறுமியைக் கைவிட்டு வேறு திசையில் ஓடியுள்ளார்.
சிறுமியை காட்டுக்குள் கோப்ரல் இழுத்துச் சென்றதாகவும், இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆனமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சந்தேகநபரின் அடையாளத்தை சிறுமி தெரிவித்ததுடன், பொலிஸ் குழுவொன்று விரைவாக செயற்பட்டு சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.