சில பல்கலைக்கழக மாணவர்கள் காலத்தை போராட்டத்தில் கடத்துகின்றனர்!

பல்கலைக்கழகங்களிலிருந்து கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும்.

இருப்பினும் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவினை பெற்றுக் கொள்வதற்கும்  இருக்கும் காலத்தை போராட்டத்தில் ஈடுபட்டு கழிக்கின்றனர் என கல்வி அமைச்சர்  கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயர்தரத்தில் சித்திப்பெறும் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது அல்லவா? நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழங்களிலும் இருந்து 40 ஆயிரம் மாணவர்களை மாத்திரமே உள்ளீர்க்க முடியும்.

இருப்பினும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் சித்தி அடைகின்றனர். அவர்களுக்கு செல்ல இடம் ஒன்று தேவையாகும். சிலர் பணத்தை செலுத்தி செல்கிறார்கள். இதில் மற்றவர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன?

இந்த பல்கலைக்கழகங்களிலிருந்து படித்து பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும்.

மற்றைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவினை பெற்றுக் கொள்வதற்கு இருக்கும் காலத்தினை போராட்டத்தில் ஈடுபட்டு கழிக்கின்றனர் என்றார்.