சீனி பாணியை தேன் என சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்தவர் மடக்கிப் பிடிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை சுகாதாரத் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.

குறித்த நபர் தப்பியோடிய போதிலும் அவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சீனிப்பாணிகளை கொண்ட போத்தல்கள் குறித்த இடத்திலேயே உடைக்க்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி அல் அக்சா பள்ளிவாயலுக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி குறித்த நபர்  சீனி பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி ஒரு போத்தல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார்.

இன்று காலை இரண்டு உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு சீனிப்பாணி போத்தல்களை விற்பனை செய்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்ட நபரை மடக்கிப்பிடித்த போது குறித்த இடத்திலிருந்து அவர் தப்பியோடி இருக்கிறார்.

இருந்தபோதிலும் சுகாதாரத் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த சீனிப்பாணி போத்தல்களை கைப்பற்றி, அவற்றை உடைத்து அழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.