பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குழு கோரும் போது தகவல்களை வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதோடு அதன் பிரதிகள் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக குழுவின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையான தகவல்களை திரட்ட முன்கூட்டி கூட்டங்கள் நடத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத கேள்விகள் அதிகாரிகளிடம் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில், பின்னர் பதிலளிக்க நியாயமான கால அவகாசம் கோரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் அழைக்கப்பட்ட கூட்டத்தில் செயலாளரால் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், சம்மந்தப்பட்ட குழுவின் தலைவரின் அனுமதியுடன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அவர் சார்பாக கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும், துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டங்களில் அமைச்சரின் ஒப்புதலுடன் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அமைச்சருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அமைச்சர் அவற்றை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருக்கு அறிவிக்க வேண்டும்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அரச அதிகாரிகளை அழைக்க எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும், அதற்கேற்ப அதிகாரிகள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
நிதி தொடர்பான மேற்பார்வைக் குழுக்களுக்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டால், அவர்கள் நிதி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.