மன்னார் மடு திருத்தலத்தில் ஞாயிறு (13) இரவு திடீரென உயிரிழந்த மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன்(வயது-28) விஷ ஜந்து ஒன்றின் தாக்குதலின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக சடலம் பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு திங்கட்கிழமை (14) காலை சடலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் போது அவரது உடலில் விச ஜந்து ஒன்று தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.