தகவல் அறியும் சட்டத்தால் நன்மை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் மூவின மக்களும்  மிகுந்த நன்மை அடைந்துள்ளதால் அதனை இன்னமும் காத்திரமாக எடுத்துச் சென்று மக்களை விழிப்படைய வைக்க வேண்டுமென  காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண  இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு அட்டாளைச்சேனையிலுள்ள மனித எழுச்சி அமைப்பு அலுவலகத்தில் ஞாயிறன்று ( 30)   இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணி உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், காணிகளை இழந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ட்ரான்ஸ்பெரன்சி இன்ரநெஷனல் அபைப்பின் அம்பாறை மாவட்ட திட்ட அலுவலர் எம். லக்ஸ்மிகாந்த் வளவாளராகக் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தகவல் அறியும் உரிமைக்கான சேவை மையத்தின் மூலம் இதுவரை சுமார் 750 பேர் சேவைகளைப் பெற்றுள்ளதாகவும் அதில் 400 இற்கு மேற்பட்டோர் கோரிய தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் வெற்றி அளித்து பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்வின்றித் தொடரும் காணி இழந்தவர்களின் பிரச்சினைகளில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களும் இனிமேல் முன்னெடுக்கவுள்ள விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.

13வது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் தீர்வுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் காணி இழந்து பாதிக்கப்பட்ட மக்களின் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 200 வருடங்களுக்கு  மேலாக இலங்கைக்காக இரத்தம் சிந்தி உழைத்து வரும் மலையக மக்களுக்கு ஆதரவை நல்க வேண்டும் என்ற நோக்கில் இடம்பெறும் ஆதரவுப் பேரணியில் கிழக்கு மாகாண காணி இழந்த முஸ்லிம்களும் இணைந்து கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.