இரண்டு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கைது செய்துள்ளது.
கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர்கள் இருவரும் விமானங்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து. அங்கிருந்து பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இந்தியன் எயார்லைன்ஸின் AI-273 விமானத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 02.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் அவர்களின் பயணப் பொதிகளில் 01 கிலோ 780 கிராம் எடையுள்ள இந்த நகைகளை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது, இந்த இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக கொண்டு வந்த நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.