தபால் துறையை நவீனமயப்படுத்த புதிய சட்டமூலம்

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தனியார் மற்றும் அரச துறையின் கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா செலவில் இந்த நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தபால் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்தார்.

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் தபால் துறையில் இலாபமீட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இந்த வருட இறுதிக்குள் 3,000 மில்லியன் ரூபாவால் நட்டத்தைக் குறைக்கவும், 2025 ஆம் ஆண்டளவில் இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டம், அதனை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இடையூறாக இருப்பதால், அதனை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,

இந்நாட்டின் பழமையான துறைகளில் ஒன்றான தபால் திணைக்களம் தொடர்பில் காலனித்துவ காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்டளைச் சட்டமே இன்றும் உள்ளது. இதுவரை ஒருமுறைதான் இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இது ஒரு பெரிய தடையாக உள்ளது. அதை மாற்றுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க நாம் எதிர்பாரக்கின்றோம். சுமார் 27,000 தபால் திணைக்கள ஊழியர்கள் உள்ளனர். மேலும், 653 தபால் நிலையங்கள், 3342 உப தபால் நிலையங்கள் மற்றும் 140 முகவர் தபால் நிலையங்கள் உள்ளன.

இவ்வளவு விசாலமான தபால் சேவை நம்மிடம் இருந்தாலும் கடந்த ஆண்டின் நட்டம் 7000 மில்லியன் ரூபாவாகும். இந்த அமைச்சை என்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தபால் சேவையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தார். அதன்படி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் காரணமாக இவ்வருடம் தபால் திணைக்கள நட்டத்தை 3000 மில்லியன் ரூபாவால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை சரிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டில், திறைசேரியில் தங்கியிருக்காத தபால் சேவையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். தற்போது முத்திரை விற்பனை மூலம் மாத்திரம் வருடாந்தம் 4000 மில்லியன் ரூபாவும், முத்திரையிடல் மூலம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 668 மில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. கடிதம் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் மூலம் 130 மில்லியன் ரூபாவையும், கேஷ் ஒன் டெலிவரி சேவை (COD) மூலம் 200 மில்லியன் ரூபாவையும் தபால் திணைக்களம் ஈட்டியுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் கேஷ் ஒன் டெலிவரி முறையை பிரபலப்படுத்தி வருமான அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு, பரீட்சை ஆவணங்கள், காணிப்பத்திரங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்றவற்றை தபால் மூலம் விநியோகிக்கும் இணைய செயல்முறைக்கு ஏற்ப தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“ஸ்மார்ட் மெயில்” உருவாக்கத்தின் போது, நீண்டகாலமாக பாரம்பரிய கள சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த துவிச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக 1,000 முச்சக்கரவண்டிகளை நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வ சீருடை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். இவற்றையெல்லாம் திட்டமிட்டு ஒரு வலுவான தபால் சேவையை உருவாக்குவதே எமது திட்டம் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.