தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம் !

எங்களுடைய இடத்தில் எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர் மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எத்தகைய கொடிய அரசின் கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை உலக நாடுகள் பார்க்கவேண்டும் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பௌத்த பிக்குகளும் பெரும்பான்மை இனத்தவர்களும் பெருமளவில் குருந்தூர் மலைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

நாம் பொங்கல் வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது,  பெரும்பான்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் எமது செயலை குழப்பும் வகையில் நடந்துகொண்டனர்.

இந்நிலையில், அங்கு கடமையிலிருந்த பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியவாறு இருந்தது.

அதனையடுத்து, குறித்த இடத்துக்கு வருகை தந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நாம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

அந்த வகையில், தொல்லியல் பிரதேசத்துக்குள் ‘தீ’ வைக்க முடியாது எனக் கூறிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், நிலத்திலே தகரங்களை வைத்து, அதன் மேல் கற்களை வைத்து, கற்களின் மேல் தகரங்களை வைத்து தீ மூட்டி பொங்கல் வைக்க முடியும் என நிபந்தனைகளோடு பொங்கல் வழிபாட்டுக்கு அனுமதித்திருந்தனர்.

தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, பொங்கல் வைப்பதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம். அப்போதும் அங்கிருந்த பெரும்பான்மை இனத்தவர்களாலும் பௌத்த தேரர்களாலும் அங்கு எமது பொங்கல் வழிபாடுகளுக்கு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

பௌத்த தேரர்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகவே பொலிஸாருடைய செயற்பாடுகள் காணப்பட்டன. பொலிஸாரின் செயல்கள் மிக மோசமானதாக இருந்தன.

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எமது மக்களின் வழிபாட்டுரிமை இங்கு மறுக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல முறை இந்த நாட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றை சர்வதேச நாடுகள் கூட தொடர்ந்தும் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இத்தகைய கொடுமையான அரசாங்கத்தின் கீழ்தான் எமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை இந்த உலக நாடுகள் பார்க்கவேண்டும்.

இங்கே பொலிஸார் எமது தமிழ் மக்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். எமக்கு எதிராக அடக்கு முறைகளை கையாண்டனர். ஆனால், பௌத்த துறவிகளுக்கு எதிராகவோ, பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவோ அவர்கள் அடக்குமுறைகளை கையாளவில்லை.

எம்மால் இங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் இதனை இவ்வாறே விட்டுவிடப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் அங்கு சென்று எமது வழிபாடுகளை மேற்கொள்வோம் என்றார்.