தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை!

தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாயும் அவ்வாறு அரங்கேறிவிடக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் , சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரியும், காலதாமதம் இல்லாமல் ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதிகோரியும் மாபெரும் பேரணி இடம்பெற்றிருந்தது.

இவ்வளவு காலமும் தமிழர் பகுதிகளில் பல புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஆனால் இன்று வரைக்கும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை.

ஆனால் கொக்குத்தொடுவாயும் அந்த விடயம் அரங்கேறிவிடக்கூடாது என்பதற்காக தமிழர் தாயகம் திரண்டு ஹர்த்தாலை அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த மாபெரும் பேரணியை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அழைப்பின்பேரில் கலந்து கொண்டிருக்கின்றோம். இது தான் தமிழ் மக்களின் உணர்வு.

இது தான் எங்களது அபிலாசை. ஆகவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக சர்வதேச விசாரணையை நடாத்துவதோடு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக சர்வதேசத்தின் நிபுணத்துவத்தோடு மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட வேண்டும் ஐநா மன்றம் இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என மேலும் தெரிவித்தார்.