தரிந்துவின் விடயத்தில் தாமதிக்கவில்லை

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விடயத்தில் தாம் உடனடியாக தலையிட்டதாகவும் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தாம் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தரிந்து கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே தமது குழு பொரளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதவரின் நிலை குறித்து விசாரித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் விரைவுப் பதிலளிப்புக் குழு பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்ததுடன், பொலிஸாரின் வாகனத்திற்குள் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தரிந்துவை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு பரிந்துரைத்ததாக அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அறிக்கையொன்றைக் கோருவதுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைப்போம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வரும் தரிந்து, தனது உடல்நிலை குறித்து தீர்மானிப்பதற்கான சில பரிசோதனை அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

பொரளையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற IMF ஒப்பந்தத்திற்கெதிரான தொழிற்சங்க போராட்டத்தை அறிக்கையிடும் போது, தரிந்து தன்னை ஊடகவியலாளர் உன அடையாளப்படுத்தும் முன்பாக பொலிஸாரால் அவரை முச்சக்கரவண்டியிலிருந்து வெளியே இழுத்து தாக்கியமை குறிப்பிடத்தக்கது.