தவிசாளர் மீது தாக்குதல்!

அக்கரைப்பற்றில் பாடசாலையில் இடம்பெற்ற  அபிவிருத்தி சங்க கூட்டம் ஒன்றில் மத்தியஸ்த சபை தவிசாளர் மீது சனிக்கிழமை (08) முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தாக்குதல் மேற்கொண்டதில் தவிசாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். தாக்குதலை மேற்கொண்டவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக அக்கரைப்பற்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க கூட்டம்   இடம்பெற்றது. இதில்,  திடீர் மரணவிசாரணை அதிகாரியும் மத்தியஸ்த சபை தவிசாளருமான சீனி முகமது தல்ஹா கலந்து கொண்டு இந்த பாடசாலையில் 1800 மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் இந்த கூட்டத்திற்கு 35 பேர் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர் என்றார்.

இந்த சங்க பொருளாளர் கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிலையில் நிதி கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்பதுடன் அதிபருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக கல்வி அமைச்சில் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டம் நடாத்துவது சட்டத்துக்கு முரணானது என கருத்து தெரிவித்தார்.

இதன்போதே, கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் மத்தியஸ்தர் சபை தவிசாளர் மீது தாக்குதல் நடாத்தியதையதுடன் அவர் காயமடைந்துள்ளார்.

அக்கரைப்பற்று மத்தியஸ்த சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை கடந்த 2ம் திகதி இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது,  எதிராளி மீது முறைப்பாட்டாளர் தாக்குல் நடத்திய சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர். அந்த சம்பவத்தின் எதிரொளியாக  மத்தியஸ்தர் சபை தவிசாளர் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் தலைமறை வாகியுள்ளதாகவும் . இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அக்கரைப்பற்று காவல் துறையினர் தெரிவித்தனர்.