தினேஷ் தலைமையிலான குழுவினரே ‘மாகாண ஆலோசனை சபை’ குறித்து தீர்மானிப்பர்

13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினரே மாகாண ரீதியிலான ஆலோசனை சபை குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளனர் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டம், மாகாண சபைகளுக்கான ஆலோசனை சபை மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் சந்திப்பொன்றை நான், கலாநிதி விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் ஆகியோர் நேரில் சென்று சந்திப்பொன்றை நடத்தினோம்.

இதன்போது, 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயங்களை பிரதமர் தலைமையிலான குழுவினரே கையாளவுள்ளதாகவும், அவர்கள் அவ்விடயங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தில் குறித்த திருத்தங்கள் சட்டமூலமாக கொண்டுவரப்படவுள்ளது. அதன் பின்னர், பாராளுமன்றத்திலேயே தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் குறித்த திருத்தங்களை அனுமதிக்காவிட்டால், மேற்படி முயற்சி பின்னடைவுகளை சந்திக்கும். இதேவேளை, மாகாண சபைகள் தொடர்பான ஆலோசனை சபை தேவையா, இல்லையா என்பதை பிரதமர் தலைமையிலான குழுவினரே தீர்மானிக்கவுள்ளனர்.

பிரதமர் தலைமையிலான குழுவினர் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும்.

இதேவேளை, பொருளாதார ரீதியான விடயங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி விடயங்களில் பின்னடைவுகள் இருப்பதாக அவர் கரிசனை கொண்டுள்ளார்.

அந்த வகையில், மாகாண ஆலோசனை சபை பொருளாதார விடயங்களையும் கையாள வேண்டிய நிலைமைகள் ஏற்படவுள்ளது. அத்துடன், எம்மால் மாகாண ஆலோசனை சபைக்காக கலாநிதி விக்னேஸ்வரன், நிர்மலா சந்திரகாசன், குருநாதன், செல்லத்துரை உள்ளிட்டவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யாத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் உள்ளீர்க்கும் யோசனைகளும் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த வகையில் மாகாண ஆலோசனை சபை அமைக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்பேன் என்றார்.