திரிபீடகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட ஏற்பாடு

இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள “சம்புத்த ஜெயந்தி திரிபீடக“ நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டு பின்னர் அச்சிடப்படும் என புத்தசசான, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது மஹா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் திரிபீடகத்தை கற்க ஆர்வமுள்ள அனைத்து மதகுருமார்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மகாநாயக்கர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியைப் பெற்ற பின் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, உயர் சபை, மேற்பார்வைச் சபை மற்றும் நிறைவேற்று சபை ஆகிய மூன்று சபைகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.