திருத்தங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானவை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச் சட்டங்கள் திருத்தங்கள், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானத்தை அனுப்பிவைத்துள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இன்று அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட  “கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலம் பொதுவாக கவனத்திற்கொள்ளும் போது, அதன் 2.3 மற்றும் 7 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரையுடன் 12(1) இணங்காததுடன், சட்டமூலத்தின் அவ்வாசகங்கள் தற்பொழுது காணப்படும் விதத்தில் நிறைவேற்றுவதற்கு, அவை அரசியலமைப்பின்  84(2) ஆம் உறுப்புரையிற்கு இணங்க பாரளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் வாக்குகளுடன் மாத்திரம் நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் கருத்தாகும் என சபாநாநயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

எனினும், சட்டமா அதிபர் தீர்மானித்த, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற குழுநிலையின் போது சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு சட்டமூலம் திருத்தப்படுமாயின், சட்டமூலத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களின் இணக்கப்பாடின்மை நீங்கும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம்  “நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு மனுக்களின் பிரதிகள் 2023 யூலை  மாதம் 31 ஆம் திகதியும் மேலுமொரு மனுவின் பிரதி 2023 ஓகஸ்ட்  மாதம் 03 ஆம் திகதியும்  தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 மே 12 ஆம் திகதி மற்றும் 2023 யூன் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணைகள் என்பனவற்றினால் தடைபெறாமல் 2023  யூலை 18 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளன.

இதற்கு அமைய, கௌரவ அருந்திக்க பர்னாந்து, கௌரவ வருண லியனகே, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ யதாமிணீ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க  அவர்கள் 2023 யூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் எனவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.