பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தொழில் நிமித்தம் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இன்றுவரை முழுமையாக வழங்கப்படவில்லை.தலைமன்னாரில் இருந்து மாத்தளைக்கு வந்த தமிழர்கள் இன்று வரை பல துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.’கூடை சுமந்து தொழில் செய்து பழக்கமில்லை,கங்காணிக்கு அடிபணிந்து எவ்வாறு இருப்பது,எங்களை எங்கள் பூமிக்கு அனுப்புங்கள் சாமி சாமி ‘என்பது பெருந்தோட்ட மக்களின் இலக்கியமாக காணப்படுகிறது.இதுவே அவர்களின் அன்றைய கால துயரங்களாகும்.
ஆரம்ப காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறை மிக மோசமானதாக இருந்தது .’மலையேறி கோப்பி நட வேண்டும்,ஒரு செடி கீழே விழுந்தால் சின்னதுரை மிதிப்பான்’என்று பாடப்பட்டது.அவர்களின் வாழ்க்கை தோட்டத்தில் தள்ளப்பட்டது.1807 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அடிமை வர்த்தகம் தடை செய்யப்பட்டது.ஆனால் 1833 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அடிமை வர்க்கம் இல்லாதொழிக்கப்பட்டது.ஆனால் அடிமை வர்க்கத்துக்கு இணையாக இலங்கையில் அடிமைவர்க்க சமூகம் தோற்றுவிக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் 125 ஆண்டுகளும்,சிங்கள தலைவர்களின் ஆட்சியில் 75 ஆண்டுகளும் வாழ்ந்துள்ளார்கள்.ஏனைய சமூகங்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்கள் குறைந்த வருமானத்தையே பெறுகிறார்கள்.நாட்டின் தேயிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தோட்ட கம்பனிகள் 1000 ரூபா வருமானத்தை கூட அவர்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பெருந்தோட்ட மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெருந்தோட்ட மக்களுக்கு போதுமான சம்பளத்தை தோட்ட கம்பனிகள் வழங்காவிட்டால் தோட்டங்களை அரசுடமையாக்க வேண்டும்.நாட்டு மக்களை அரசாங்கம் சமமாக நடத்துவதாக இருந்தால் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.தோட்டங்களை கம்பனிகள் திட்டமிட்டு பலவீனப்படுத்துகின்றன.
பெருந்தோட்ட பகுதிகளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் இன்றும் லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள்.தற்போதைய நாகரிகத்திலும் இந்த நிலையே தொடர்கிறது.மலையக மக்கள் இன்றும் இந்த மண்ணுக்கு உரமாகுகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த உரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை.மண்ணை நம்பி உழைத்தவர்களுக்கு ஏன் காணி உரிமை வழங்க கூடாது.முதலில் காணியை வழங்குங்கள் பிறகு வீடு கட்டுவது குறித்து பேசலாம்.
நாட்டில் ஏனைய மாகாணங்களில் உள்ள கல்வி முறைமையை காட்டிலும் குறைவான கல்வி வளங்களே பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகிறது.அடிப்படை மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான கல்வி சேவை மலையகத்தில் இல்லை.வறுமையால் கல்வி கேள்விக்கிடமாகியுள்ளது.
ஏனைய பகுதிகளை காட்டிலும் பெருந்தோட்ட பகுதிகளில் தாய்மார்களினதும்,பிள்ளைகளினதும் சுகாதார போசாக்கு குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.மந்த போசனை மட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.ஆகவே மலையக மக்கள் கல்வி,வாழிடம்,சுகாதாரம்,உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட அதிகாரத்துடன் அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்களை இரண்டாம் அல்லது மூன்றாம் தரப்பினராக மாற்றும் நிலைமையே இதுவரை காலமும் தோற்றம் பெற்றுள்ளது.ஆகவே பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கொண்டு வரும் சகல தீர்மானங்களுக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.