வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்ட அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (15) கலந்து கொண்ட போா பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இத் திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகளே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருப்பதிக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.
அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கின்றன.
அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ் கண்ட அவருடைய வார்த்தைகளை இங்கே தருகின்றேன். மரியன்னை என்றும் உங்களோடு இருக்கிறார். அவர் ஒவ்வொரு வீட்டினுடைய அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களினதும் அன்னை.
பிரகாசிக்கின்ற இந்த இலங்கைத்தீவில் உள்ள தன் பிள்ளைகளை அன்னை ஒருபோதும் மறக்க வில்லை.
எவ்வாறு மரியாள் சிலுவையில் தொங்கிய தனது பிள்ளையை விட்டு விலகாது நின்றாரோ அவ்வாறே துன்புறும் தனது இலங்கை நாட்டு பிள்ளைகளை அவர் விட்டு விலகுவது இல்லை.
நம்முடைய பரிசுத்த தாயான மரியா தன்னுடைய இத்தீவின் பிள்ளைகளை மறப்பதில்லை.அவரின் பரிந்துரை ஊடாக நீதி,நல்லிணக்கம்,அமைதி எங்களுக்கு கிடைப்பதாக.
உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது.
பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன். எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ் மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
மீண்டும் ஒரு போர் வேண்டாம்.இன,மத,மொழி,சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும்,அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெறுவதாக.
வெறுப்பும், விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதான் என்பது ஓர் இல்லாத நிலை அன்று.இது நல்லிணக்கத்திற்கான நேரம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.
அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள்.
சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.
பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும்,சகோதரத்துவத்தையும், நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும்.
எந்த ஒரு சமையத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு சலுகைகள் போன்றவற்றை பயண்படுத்தி மற்றைய சமையங்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.