நாடாளுமன்றமே இறுதியான தீர்மானத்தினை எடுக்கும்

13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற உணர்வு ரீதியான விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால் அது தொடர்பில் ஒன்றிரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தலைமையிலான குழுவால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தினை எடுக்கும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவின் அங்கத்தவரும், அரசாங்கத்தின் பிரதம கொரடாவுமான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக சர்வகட்சிக் குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், தற்போது அரசியல்கட்சிகளின் நிலைப்பாடுகள் கோரப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பல தமது முன்மொழிவுகளை செய்துள்ளன. இதனையடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு குறித்த விடயங்கள் மற்றும் ஏனைய கலந்துரையாடல்களின் அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் நிர்வாக அதிகாரங்களை பகிர்வது சம்பந்தமான சட்டமூலம் ஒன்றை தயாரிக்கவுள்ளது.

அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளது.

அதாவது, குறித்த நிர்வாகப் பகிர்வு சம்பந்தமாக பாராளுமன்றமே இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது.

இந்தச் செயற்பாடுகளில் எவ்விதமான எதிர்மறையான விடயங்களும் இல்லை. அத்துடன் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனேயே இவ்விடயங்களை முன்னெடுக்கவுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சராக நான் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் நிர்வாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடகும்.

இங்கு காணி, பொலிஸ் போன்ற உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பில் தற்போது கலந்துரையாடுவது எதிர்காலத்தை நோக்கிய முன்னெடுப்புக்களை வெகுவாக பாதிப்பதாகவே அமையும்.

ஏனெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை. ஆகவே, அவை தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியுள்ளது. நீண்ட கலந்துரையாடல்கள் அவசியமாகிறது என்றார்.