நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் சுயாதீன அணியின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளுங்கள்

பாராளுமன்றத்தில் எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் 18 உறுப்பினர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியின் சுயாதீன உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும்.ஆனால் தற்போது 33 பேர் உள்ளார்கள்.

நீங்கள் குறிப்பிடுதற்கு அவதானம் செலுத்தினால் (எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி) முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குழுவில் இணைத்துக் கொள்ள நேரிடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் பங்குப்பற்றுவதில்லை.குழுவில் எடுக்கும் தீர்மானங்கள் ஏதும் எமக்கு தெரியாது.

ஆகவே எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இணைத்துக் கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்தோம்.

ஆனால் இதுவரை எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே  எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் 16 பேர் அங்கம் வகிக்க வேண்டும்.ஆனால் தற்போது 33 பேர் அங்கம் வகிக்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிடுவதை போன்று புதிதாக உறுப்பினர்களை இணைத்துக் கொண்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ள நேரிடும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் 33 உறுப்பினர்களும் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்வதில்லை.ஆகவே கூட்டத்துக்கு சமுகமளிக்காதவர்களை நீக்கி,எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன எதிரணி உறுப்பினர் மொஹமட் முஸம்பில் பாராளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் எதிரணியில் சுயாதீனமாக செயற்படுகிறார்கள்.

இவர்களில் எவரும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் அங்கம் வகிப்பதில்லை.ஆகவே எமது உரிமை மீறப்பட்டுள்ளது.

எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களை குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.ஆனால் இதுவரை ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் உள்ள அரசியல் கட்சி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் பங்குப்பற்றும் போது 18 உறுப்பினர்கள் உள்ள சுயாதீன அணியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை முறையற்றது.ஆகவே இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது என்றார்.