நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதை கடுமையாக எதிர்ப்பும்

பொருளாதார முன்னேற்றத்துக்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்.

நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதனை கட்சி என்ற ரீதியில் கடுமையாக எதிர்ப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாத்ததும்பர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைத்துள்ளோம்.

இருப்பினும் ஜனாதிபதியின் அரசியல்,பொருளாதார கொள்கைக்கும்,எமது அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

69 இலட்ச மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிமாற்றத்தை தோற்றுவித்தார்கள்.

பொய்யான போராட்டத்தால் துரதிஷ்டவசமாக மக்களாணை பலவீனப்படுத்தப்பட்டது.

ராஜபக்ஷர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

போராட்டத்துக்கு முகம் கொடுத்த அனுபவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.

படலந்த சம்பவம் தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை.

நெருக்கடியான சூழலில் அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வரவில்லை.

ராஜபக்ஷர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை பாதுகாப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

நாட்டுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்தால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்பதை உறுதியாக குறிப்பிட்டக் கொள்கிறோம் என்றார்.