நாமலின் திருமணநிகழ்விற்கான மின் கட்டணம் 2.6 மில்லியன் – இன்னமும் செலுத்தவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் மின்கட்டணம் செலுத்தாதது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு  இலங்கை மின்சாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து துல்லியமான விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் அந்த தகவல்கள் தான் பதிலளிப்பதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நாமல்ராஜபக்சவின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2.6மில்லியன்  என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் நளின்ஹேவகே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கே  இலங்கை மின்சாரசபை இதனை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மின்சாரபாவனைக்கான கட்டணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச இன்னமும் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிந்த பின்னர் உண்மையை அறிய முயன்றதாக நளின்ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாமல் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சிலமாதங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தேன் – அதற்கு நாமல் அவ்வாறான மின்கட்டணம் குறித்து தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்திருந்தார் என நளின்ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை அளித்துள்ள பதிலில் வீரகெட்டிய வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு விளக்குகள் மின்பிறப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியமைக்காக 2.6 மில்லியன் செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அதனை உரிய நபர்கள் செலுத்தவில்லை என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.