மலையக மக்கள் இலங்கை வந்து 200 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதையிட்டு பல தரப்பினரால் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆகவே 12ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடை பயணமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே பெருந்தோட்ட மக்கள் அனைவரும் இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும் இன்றும் அவர்களுடைய வாழ்க்கை நிலையில் எந்தவிதமான மாற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை. வசிப்பிடம், சுகாதார வசதி, கல்வி,போக்குவரத்து மற்றும் பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தினரை விடவும் பின்தங்கிய நிலையிலே எமது மக்கள் வாழ்கிறார்கள்.
எவ்வாறாயினும் நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த நிலையினை மாற்றியமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தோம். காலம் காலமாக லயன் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்காக 7 பேர்ச்சர்ஸ் காணியில் தனி வீடமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.4000 வீடுகளை நிறைவு கட்டத்திற்கு கொண்டு வந்ததுடன் 10ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்திற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டனர்.
எமது நல்லாட்சியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம். ஆனால் இப்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்தினால் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கான காணிகளை வழங்கினார். சுயாமாகவேனும் வீடுகளை கட்டிக்கொள்ளும் நிலைமைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மலையக மக்களுக்கு 10 பேர்ச்சர்ஸ் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை நாம் உருவாக்கினோம். இந்த அதிகார சபையின் ஊடாக மலையை மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும். இதன்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு மலையக மக்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதுடன், அவர்களின் தொழில் முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோன்று பெருந்தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிலங்களை பகிர்ந்தளித்து, அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதேவேளை தற்போது மலையக மக்கள் இலங்கை வந்து 200 வருடங்களையிட்டு பல தரப்பினரால் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி 12ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடைபயணமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினம் வேலைக்கு போகாமல் அதில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்களை அழைக்கின்றேன் என்றார்.