பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுக!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லூர் ஆலயத் திருவிழா காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று பெருமை மிக்க தமிழர்களின் தலையாய திருக்கோவிலாகிய நல்லூர் கந்தசுவாமி கோவில் இம்மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 25 நாட்கள் சிறப்பு உற்சவம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் யாழ். மாநகர சபை மண்படத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் ஆலோசிக்கப்பட்டபடி, சகல மக்களும் நல்லூர் திருவிழாக் காலங்களில் காலம் காலமாக பின்பற்றுகின்ற ஒழுங்குக் கட்டுப்பாடுகளை பேணவேண்டும்.

குறிப்பாக, ஆலய வழிபாட்டுக்கு வருபவர்கள் வரலாற்றுப் பண்பாடுகளை பேணக்கூடிய வகையில் சைவ பாரம்பரியமான பண்பாட்டு உடைகளை அணிந்து தெய்வ வழிபாட்டுக்கு வருவதே சாலப்பெருத்தமாகும்.

ஆலய சுற்றாடலில் வேறு விடயங்களுக்கு இடமில்லாத வகையில் ஆத்மீகத்தை மட்டும் நேசிக்கின்ற வகையில் சகலரும் அதற்குரியவர்களாக நடந்துகொள்ளவேண்டும்.

நல்லூர் மகோற்சவ காலம் எமது பண்பாட்டு அடையாளத்தை நிரூபிக்கின்ற காலம். எங்களுடைய அடுத்த தலைமுறையை ஆற்றுப்படுத்துகின்ற காலம். எனவே, கோவிலுக்கு வருபவர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பக்திபூர்வமாக வழிபாடு செய்து, கோவில் வீதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து மகிழ்ச்சியாக இந்த 25 நாட்களையும் ஒரு தவ வாழ்வாக கருதி வழிபடுங்கள்.

வீண்வார்த்தைகள் பேசாமல், கோவில் வீதியை தெய்விகத்துக்குரிய வீதியாக மாற்றவேண்டிய கடமை பக்தர்களுக்குரியது.

எனவே, நல்லூர் உற்சவ காலத்திலே ஆடம்பரமாக ஆபரணங்கள் அணிந்து, நவநாகரிகமாக பக்தர்கள் வருவதை தவிர்த்து, எளிமையாக வழிபாட்டுக்குரிய தோற்றத்தில் வருகைதந்து, அமைதியாக வழிபாடு செய்வதை கருத்திற்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

ஆலய வீதியில் வாகனங்களை செலுத்தாதீர்கள். அவை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் வீதிகளாகும்.

என்ன பதவி நிலையை கொண்டவர்களாக இருந்தாலும், எத்தகைய உயர் நிலையை அடைந்தவர்களாக இருந்தாலும், நல்லூர் வீதியில் நடந்து வாருங்கள். இது மிக முக்கியமாகும்.

படித்தவர்கள் உயர் பதவியில் இருப்பவர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு, நல்லூர் அடியவர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை அனைவரும் பேணுங்கள் என்று அன்பான வேண்டுதலை விடுக்கின்றேன் என்றார்.