பம்பலப்பிட்டி துப்பாக்கிப் பிரயோகம் குறித்து கலால் திணைக்களம் விளக்கம்

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கலால் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர்  நேற்று திங்கட்கிழமை ( 07)  மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு வேனொன்றில் தப்பிச்சென்ற போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்வதற்காக சென்றிருந்த கலால் திணைக்கள அதிகாரிகளினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம்தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பதில் ஊடகப்பேச்சாளரும்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறுகையில்,

முதலில் அந்த பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தினோம். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு வேனின் இலக்கத்தையும் கண்டறிந்தோம். அதற்கமைவாக வீதி தடைகளுக்கு வேனின் இலக்கங்கத்தை வழங்கினோம்.

அதன்படி வெள்ளவத்தை வீதி தடை போடப்பட்டிருந்த சோதனைச்சாவடியில்அந்த வேனை கண்டுபிடிக்க முடிந்தது. இதன்போது வேனில் நாலவர் இருந்தனர். அதன்பின்னர் நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் கலால் திணைக்களத்தின் பரிசோதகர் என்பதுடன் மற்றையவர்கள் கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் என அடையாளம்காணப்பட்டது.

அவர்கள் நால்வரும் சிவில் உடையில் இருந்தனர். அவர்கள் கடமைக்கு வருவதாக பொலிஸாருக்கு அறிவிக்க இல்லை. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஜீப் வண்டியில் பயணித்த நபர் குறித்த ஜீப் வண்டியை 2 கிலோ மீட்டர் தூரத்தில் விட்டுச்சென்றுள்ளார். அவர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறுகையில்,

ஹேரோயின் சுற்றிவளைப்புக்காக சென்ற கலால் திணைக்கள அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். 8 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இந்த சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டனர்.

கிடைத்த தகவலுக்கு அமைவாக போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் 150 கிராம் ஹெரோயின் கொள்வனவு செய்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கு முயன்றுள்ளனர்.

இதன்போது ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மற்றுமொரு சந்தேக நபர் வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்த போது வாகனத்தின் மீது அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளும் போது சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் கைது செய்த அதிகாரிகள் குழு தமது தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர். தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு முயற்சித்த மற்றைய நால்வர் கொண்ட அதிகாரிகள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வாறான சுற்றிவளைப்புகளின் போது துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தமது திணைக்களத்துக்கு பூரண அதிகாரமுள்ளதாகவும் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு கலால் அதிகாரிகளையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டார்.