வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மிகவும் தொன்மை வாய்ந்ததுமான யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா திங்கட்கிழமை(14.08.2023) பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாகவும், மிகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சண்முகப் பெருமான், விநாயகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் திருநடனத்துடன் ஆலய உள்வீதியில் உலா வந்து காலை-09.30 மணியளவில் சித்திரத் தேர்களில் ஆரோகணித்தனர்.
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டு, சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க சித்திரத் தேர்களின் பவனி ஆரம்பமானது.
சண்முகப் பெருமான் 45 அடி உயரம் கொண்ட சித்திரத் தேரில் எழில்மிகு கோலத்துடன் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாத் திருக் காட்சியாக அமைந்தது.
சித்திரத் தேர்கள் வீதி உலா வந்த போது அடியவர்கள் பலரும் காவடிகள், அங்கப் பிரதட்சணம் எடுத்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். ஆலய ஆதீன ஹர்த்தாவும், பிரதமகுருவுமான மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினர்.