பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்படமாட்டாது

பாடசாலைகளுக்கு அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படும் நீரை இலவசமாகவும் மேலதிகமாக பயன்படுத்தப்படும் நீருக்கு கட்டணம் அறவிடவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர எம்பி அது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எம். பி. தெரிவிக்கையில், 

நாட்டில் 10ஆயிரத்தி நூறு பாடசாலைகள் இருக்கின்றன. பாடசாலை நீர் பட்டியலில் அரசாங்கம் செலுத்துவது நான்கில் ஒரு பகுதியாகும்.  நான்கில் 3 பகுதியை பிள்ளைகளின் பெற்றோரே செலுத்தவேணடி இருக்கிறது. இவ்வாறு நீர் கட்டணம் நூற்றுக்கு 900 வரை அதிகரி்த்திருப்பதால், இந்த கட்டணத்தை யார் செலுத்துவது?

பாடசாலைகளின் நீர் கட்டண பட்டியல் நூற்றுக்கு தொல்லாயிரமாக அதிகரித்திருக்கிறது. இந்த கட்டண அதிகரிப்பை பிள்ளைகளின் பெற்றோர்களின் மீது சுமத்தக்கூடாது. மதஸ்தலங்களின் நிலைமையும் அவ்வாறே அதனால் இந்த நிறுவனங்களுக்கு நிராவணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

பாடசாலைகளில் நீர் கட்டணத்தை அறவிடாமல் இருப்பதற்கு நாம் ஏற்கனவே தீர்மானித்தோம். அதன்பின்னர் நீர் கட்டண திருத்தத்தையடுத்து அத்தியாவசியமாக உபயோகப்படுத்தும் நீரின் அளவை இலவசமாக விநியோகிக்கவும் அதற்கு மேலதிகமாக உபயோகிக்கப்படும் நீருக்கு கட்டணம் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாம் அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளோம்.

அடுத்தபடியாக  அந்த மட்டுப்படுத்தப்பட்ட கட்டணம் அதிகரித்துச் செல்லுமானால் அதற்காக அடுத்த வருடம் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒரு தொகை நிதியை மாகாண மட்டத்தில் ஒதுக்குவதற்கு நான் யோசனையை முன்வைக்க தீர்மானித்துள்ளேன்.

அதனால் அந்த சுமை எவர் மீதும் சுமத்தப்படமாட்டாது. அரச நிதியிலிருந்தே அது வழங்கப்படும் என்றார்.