பாப்பரசரின் பிரதிநிதி தலைமையில் மடு திருத்தல ஆவணி திருவிழா!

பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (28)  மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் திருவிழா தொடர்பில் குறிப்பிட்ட விடயங்களாவன:

மடு திருத்தல ஆவணி திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

14ஆம் திகதி வரை நவநாள் ஆயத்த வழிபாடுகள், திருப்பலிகள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் இடம்பெறும்.

14ஆம் திகதி மாலை நற்கருணை ஆராதனையும் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெறும்.

15ஆம் திகதி காலை 6.15 மணிக்கு பரிசுத்த பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மரியன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

மடு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சகல வீடுகளும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால், ஏனைய பக்தர்களுக்கு வீடுகளை வழங்க முடியாதுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து திருவிழாவில் கலந்துகொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மடு திருவிழாவை பொழுதுபோக்காக கருதாமல் பயபக்தியுடன் பங்குகொண்டு அனைவரும் விழாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பாப்பரசரின் பிரதிநிதி கடந்த ஜூலை 25ஆம் திகதி யாழ். புனித யாகப்பர் தேவாலய திருவிழாவிலும், கடந்த 26ஆம் திகதி  இளவாலை புனித அன்னம்மாள் தேவாலய திருவிழாவிலும் கலந்துகொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.