ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கும் சலுகைகள் அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பாரபட்சத்தை இல்லாதொழித்தால் தோட்ட மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே முடிவுக்கு வரும். பல்லாண்டு காலமாக பல தரப்பினராலும் பேசப்பட்டு வந்தாலும் மலையக மக்கள் இன்றும் நவீன அடிமைகளாகவே எந்த உரிமையும் இல்லாமல் வாழ்கின்றனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் 200 வருட வரலாற்றை நினைவு கூருகின்றனர். எனினும் எம்மால் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு என்று எதுவும் கிடையாது.
அந்நிய செலாவணியை அதிகமாக ஈட்டிக் கொடுப்பவர்கள் என்பதை சொல்ல முடியுமா? அல்லது எமது சமூகம் ஏனைய சமூகங்களுக்கு சமமாக இந்த நாட்டில் உரிமையுடன் வாழ்கின்றது என்று சொல்ல முடியுமா? இந்த சபையிலும் எமது பேச்செல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே இருந்து வருகிறது. இந்த நிலை இவ்வாறே தொடரக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.
சபையில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிணர் என்று பலரும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசினார்கள். அதனை நாம் இரண்டு விதமாக பார்க்க முடியும்.
உண்மையிலேயே பிரச்சினைகள் தீர வேண்டும் என மனதார தெரிவிப்பவர்கள் உள்ளார்கள். இன்னும் ஒரு தரப்பினர் வெறுமனே முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
சபையில் பேசிய பெரும்பான்மையினர் உண்மையிலேயே இதய சுத்தியுடன் அதனை பேசியிருந்தால் உறுதியாக மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்பலாம்.
ஆனால் எம் மக்களைப் பொறுத்தவரையில் வீட்டு உரிமை கிடையாது. காணி உரிமை கிடையாது. ஒழுங்கான தொழில் வாய்ப்பு, முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. சுகாதார வசதிகள் கிடையாது.
அரச நிவாரணங்கள் கிடையாது.மொத்தத்தில் கௌரவமாக வாழக்கூடிய ஒரு நிலைமையும் கிடையாது. இந்தக் கிடையாது என்பதற்கே நாம் சொந்தக்காரர்களாக உள்ளோம் அதுவே உண்மை.
அதை தந்திருக்கின்றோம் இதை வழங்கியிருக்கின்றோம் என்று எவராவது சொன்னால் அது வெறும் சொச்சமே என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்றும் கூட நவீன அடிமைகளாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைத்து நாம் வெட்கப்படுகின்றேன். அனைத்திலும் காட்டப்படுகின்ற எமக்கான பாரபட்சமே இதற்கான காரணம் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். தயவுசெய்து பாரபட்சம் காட்டுவதை இனியாவது நிறுத்துங்கள் என வினயமாக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனைய மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமையும் சமமாக எமது மக்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த பாரபட்சத்தை இல்லாதொழித்தால் தோட்ட மக்களின் பிரச்சினைகள் இயல்பாகவே முடிவுக்கு வரும் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன் காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் வாக்குறுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இன்று மலையக மக்களது பிரச்சினைகள் பெருமளவில் தீர்ந்திருக்கும்.