நாடாளுமன்ற குழு அறை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதாம்!

நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டாதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற வீடு பராமரிப்புப் பிரிவு தொடர்பில் 2023 ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த திகதிகளில் வெளியிடப்பட்ட ஊடக செய்திகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இக்குழு தற்பொழுது விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பணியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் பாராளுமன்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி அல்லது தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விடயங்களைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது உதவிச் செயலாளர் நாயகத்தைச் சந்தித்து தகவல்களை முன்வைக்க முடியும் என உள்ளக சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்தக் குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற நிலையில் இடம்பெற்று வருவதாகவும் ஏதாவதொரு அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.