பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.  கத்திகள் மற்றும் குண்டாந்தடிகளுடன் புகுந்தவர்கள், அங்கிருந்தவர்களை வீட்டுக்குள் சிறைப்பிடித்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அத்துடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இதனால், யுவதி பலியானதுடன், காயமடைந்த 9 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த வீடு பற்றியெறிந்துள்ளது. இதனால், வீட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா சம்மா சப்தீர் (வது 21 என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.