புதிய காவல் துறை மா அதிபர் யார்? தீர்மானம் நாளை!

பதில் காவல் துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதா? அல்லது காவல் துறை மா அதிபராக இருந்த சி. டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவதாக என்பதை பரிந்துரை செய்யும் பொறுப்பு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை (09) அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காவல் துறை மா அதிபராக இருந்த சி. டி.  விக்ரமரத்ன கடந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கினார்.

03 மாத சேவை நீட்டிப்பு ஜூன் 25 அன்று முடிவடைந்தது.

இதன்படி, குறித்த கால அவகாசம் முடிவடைந்து 13 நாட்கள் கடந்துள்ள நிலையில், காவல் துறை மா அதிபர் ஒருவரை நியமிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி  பதில் காவல் துறை  மா அதிபரை நியமித்தல் அல்லது பொலிஸ் மா அதிபராக இருந்த சி. டி. விக்கிரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்குவது குறித்து பரிந்துரை செய்யுமாறு அமைச்சர் டிரான் அலஸிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, காவல் துறை மா அதிபர் பதவி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டு அதன் பின்னர் ஜனாதிபதி காவல் துறை  மா அதிபர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள்  காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கடந்த வியாழன் அன்று பொது பாதுகாப்பு அமைச்சர்  டிரான் அல்ஸை நேரில் சந்தித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.