பூர்வீக வாழ்விடங்களை அழிக்கும் அபிவிருத்திகள் தேவையற்றது

மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இல்லாதெழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் தேவையற்ற ஒன்று என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – வேரவில் பகுதியில் பத்தாவது நாளாக பொன்னாவெளி சுண்ணக் கல் அகழ்வுக்க எதிராக தொடர்ந்தும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டத்தில் நேற்றையதினம்(12.08.2023)  கலந்துகொண்டு கருத்து தெரிவித்தே போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான மூலபொருளான சுண்ணக் கல் அகழ்வை மேற்கொள்ளவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நிறைவுற்றுள்ளது.

குறித்த நிறுவனம் ஒன்று கடற்கரை கிராமங்களான மேற்படி கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழம் வரை சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டம் வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு கிராம மக்களுக்கு உடனடியாகவும் ஏனைய அயல் கிராம மக்களுக்கு படிபடியாகவும் பாதிப்பை ஏற்படுத்த போகிறது.

பொது மக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவாகும். ஏன்னெனில் கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து குறித்த பிரதேசத்தில் உள்ள நன்னீர் உவர் நீராக மாற்றமடையும், பின்னர் நிலம் உவராக மாறும் இதன்போது மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை உருவாக்கும்.

மேலும் தற்போது கிராஞ்சி குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த பிரசேத்தின் நிலத்தடி நீரை மூலமாக கொண்டே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

சுண்ணக்கல் அகழ்வு காரணமாக இந்தநிலத்தடி நீர் வளம் பாதிக்கப்பட்டு குறித்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், தொழிற்சாலை கழிவுகள், தூசுகளால் பொது மக்கள் நோய்த் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்படி ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக அதனால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புக்களே அதிகமாக ஏற்படும்.

ஆகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனை எமது சமத்துவக் கட்சியும் அந்த மக்களுடன் இணைந்து எதிர்க்கிறது. என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.