பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் காய் நகர்த்தலை ரணில் திறமையாக முன்னெடுக்கிறார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்தும் அரசியல் காய் நகர்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையாக செயற்படுத்துகிறார்.

ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கில்லை. இருப்பவர்களையாவது ராஜபக்ஷர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரத்தினபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.அரசியலில் நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார்.

அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், அமைச்சு பதவி இல்லாத பிறிதொரு தரப்பினர் பஷில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறார்கள்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஆகவே விலகி சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு முன்னர் இருப்பவர்களை பொதுஜன பெரமுன தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை செல்கிறது.

69 இலட்சம் மக்களாணைக்கும், ஜனாதிபதியின் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே பொதுஜன பெரமுனவே தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.