நாட்டில் நிலவும் வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 50 வீதமான நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
தற்போது நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையற்ற விடங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
லபகமுவ மற்றும் கரட்டுவாவ ஆகிய நீர்நிலைகளிலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது.
அதனை எம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும். பியகம மற்றும் அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் மட்டத்தை தேவையான மட்டத்தில் பேண முடிந்தால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு தேவையான நீர் விநியோகத்தை முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக சபைக்கு சொந்தமான 344 நீர் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகிறது. மொத்த நீர் கொள்ளவுகள் நிலையங்கள் 267 காணப்படுகிறது.
இவற்றின் மொத்த குடிநீர் உற்பத்தி 2.63 கன மில்லியன் லீட்டர்களாகும். தற்போது 42 உற்பத்தி நிலையங்களில் நீர்மட்ட கொள்ளளவு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட நீரின் கொள்ளளவு 9 வீதத்தால் குறைவடைந்துள்ளது.வரட்சியின் காரணமாக
நாட்டில் 54 ஆயிரத்து 580 நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்காலத்தில் 58 ஆயிரத்து 866 நீர்நிலைகள் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் எமக்கு தேவையான அளவு நீரை விநியோகம் செய்ய முடியாமையால் குறிப்பிட்ட சில நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை நேர அடிப்படையிலேயே விநியோகிக்கிறோம்.
நீர்மட்டங்களின் அளவுக்கு ஏற்ப மணித்தியாலங்களையும் குறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்றார்.