பொலிஸ் அதிகாரம் கட்: 22ஆவது திருத்தம் வருகிறது!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது  திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவே இந்த திருத்த சட்டத்தை தனிநபர் ​பிரேரணையாக கொண்டுவரவுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுயைாக நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரத்தை பின்னரும் ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதற்காக சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அது இருள் சூழ்ந்த யுகத்துக்கே தள்ளப்பட்டிருந்தது என்றார்.

இந்நிலையில், தேசப்பற்றாளர்களை இனங்காணும் வகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரங்களை களையும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.