போராட்டங்களை அடக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது

அரசாங்கம் நாட்டு மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. அவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை.

இருப்பினும்  போராட்டங்களை அடக்கி, நசுக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அண்மையில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நாட்டுக்கு வருகை தந்தார். இதன்போது அவர்  ஜனநாயக உரிமை மற்றும் மக்களுடைய உரிமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறினார்.

ஜனநாயக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பாரியதொரு நாடாகவே பிரான்ஸ் வரலாற்றில் பார்க்கப்படுகிறது. அப்படியானதொரு நாட்டிலிருந்து ஜனாதிபதி எமதுநாட்டுக்கு வரும் போது எமது ஊடகவியலாளர் ஒருவரை தாக்கி பலவந்தமாக பொலிஸார்  கைது செய்தனர்.

இதேவேளை ஜப்பான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார். நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டு அவர்களின் பூரணமான ஆதரவுடன் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. நாட்டு மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கவில்லை, தேர்தலை பிற்போட்டுள்ளனர்.

மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் செயற்படுகின்றனர். அதை அடக்கி, ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றனர், தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள், இவற்றையெல்லாம் பார்க்கும் போது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது என்றார்.